ஊட்டி மலர் கண்காட்சி: 10 லட்சம் நாற்றுகள், 26 அலங்காரங்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி, இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நிலவும் இதமான காலநிலை காரணமாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தேர்தல் காரணமாக ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, குன்னூரில் பழ கண்காட்சி மட்டுமே நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 14-ஆம் தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கப்பட்டது. இதில் 2 லட்சம் ரோஜா மலர்களால் பறவைகள் வடிவ அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு ரசித்து வருகின்றனர். அதே சமயம், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கண்காட்சி வரும் 28-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும். நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இக்கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியில், ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்ளிட்ட 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகளாக நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மலர் மாடம் உள்ளிட்ட இடங்களில் 50 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன.

தமிழகத்தின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில் போன்று, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்னேசன் மலர்கள் மற்றும் பிற மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊட்டி மலை ரயில் என்ஜின், மாமல்லபுரம் கோவில், திருவாரூர் தேர் உள்ளிட்ட 26 மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்கும் மலர் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான மலர்களால் இந்த அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கள்ளிச்செடி மாளிகை, கண்ணாடி மாளிகை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளையும் குழந்தைகளையும் கவரும் வகையில், தாவரவியல் பூங்கா வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த முறை 11 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version