போலீசாரை மிரட்டிய வட இந்திய ஓட்டுநர் ஒருவர், 'தளபதி விஜய் நம்பர் என்னிடம் உள்ளது, புகார் அளித்துவிடுவேன்' என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த வீடியோவில், பில்லிங் மெஷினுடன் ஒரு காவலர் வட இந்திய ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்பதாகத் தெரிகிறது. அதற்கு அந்த ஓட்டுநர், 'எங்க தளபதி இருக்காரு.. இது எங்க வண்டி, காலியாகத்தான் இருக்கு.. பாருங்க, சீல் கூட இல்லை' என்று பதிலளிக்கிறார். இருப்பினும், காவலர் லஞ்சம் கேட்பதை நிறுத்தவில்லை.
இதையடுத்து, அந்த ஓட்டுநர், 'எங்க தளபதி நம்பர் கூட இருக்கு என்கிட்ட…' என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும், காவலர் அந்த வட இந்திய ஓட்டுநரின் போனை பிடுங்கிக் கொண்டார்.
காக்கி உடையில் இருந்த அந்த நபர் எந்த துறையைச் சேர்ந்தவர் என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. காவல்துறையினர் பொதுவாக காக்கி அல்லது கருப்பு நிற ஸ்ட்ராப் அணிவார்கள். வனத்துறையினர் பச்சை நிறத்திலும், ஆர்டிஓ ஆய்வாளர்கள் நீல நிறத்திலும் ஸ்ட்ராப் அணிவது வழக்கம். ஆனால், தீயணைப்புத் துறையினர் மட்டுமே சிகப்பு வண்ணத்தில் ஸ்ட்ராப் அணிவார்கள்.
எனவே, பில்லிங் மெஷினுடன் லஞ்சம் கேட்ட அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

