விண்வெளி அறிவியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பூமியைப் போன்ற சுற்றுப்பாதையைக் கொண்ட 'ஹெச்.டி 137010 b' என்ற புதிய கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 68 முதல் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
'பிளானட் ஹண்டர்ஸ்' என்ற குடிமக்கள் அறிவியல் திட்டத்தில் (Citizen Science Project) பங்கேற்ற ஆர்வலர்கள், கெப்லர் விண்வெளி தொலைநோக்கி சேகரித்த பழைய தரவுகளை ஆய்வு செய்தபோது இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இது ஒரு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் அல்லாமல், சாதாரண மக்களின் ஆர்வத்தாலும் உழைப்பாலும் சாத்தியமானது குறிப்பிடத்தக்கது.
2009 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த ஆர்வலர்கள் ஆராய்ந்தனர். 2017 ஆம் ஆண்டில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் ஒளி சுமார் 10 மணி நேரம் மட்டும் மங்கியதை அவர்கள் கவனித்தனர். ஒரு கிரகத்தின் இருப்பை உறுதிப்படுத்த பலமுறை ஒளி மங்குவதைக் கவனிக்க வேண்டும் என்ற விதிகளுக்கு மத்தியில், அந்த ஒற்றை ஒளி மங்கும் நிகழ்வின் ஆழம் மற்றும் கால அளவை வைத்து, இது ஒரு கிரகம் தான் என்றும் அதன் அளவையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஹெச்.டி 137010 b கிரகம் நமது பூமியுடன் பல வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையை விட இது வெறும் 6% மட்டுமே பெரியது. பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்தக் கிரகம் தனது நட்சத்திரத்தைச் சுற்றிவர 355 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
இதன் தாய் நட்சத்திரம் நமது சூரியனைப் போன்றது என்றாலும், சூரியனை விட 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவானது. இருப்பினும், இக்கிரகம் சூரியனிடம் இருந்து பூமி பெறும் ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு ஆற்றலை மட்டுமே பெறுகிறது. இதன் காரணமாக, அதன் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 68 முதல் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இது பூமியை விட செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலைக்கு நெருக்கமாக உள்ளது.
இந்த கிரகம் ஒரு நட்சத்திரத்தின் 'உயிர்வாழத் தகுதியான மண்டலத்தின்' (Habitable Zone) வெளி விளிம்பில் அமைந்துள்ளது. இந்தக் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு நிறைந்த அடர்த்தியான வளிமண்டலம் இருந்தால், 'பசுமை இல்ல விளைவு' (Greenhouse effect) மூலம் வெப்பம் அதிகரித்து, அங்கு நீர் திரவ நிலையில் இருக்க வாய்ப்புள்ளது.
வருங்காலத்தில், இந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அல்லது மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இத்தகைய வாயுக்கள் கண்டறியப்பட்டால், அங்கு உயிர் வாழ்வதற்கான அறிகுறிகளாக அவை கருதப்படும். இந்தக் கிரகம் சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி நாம் அங்குச் சென்றடைய பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு, மனிதகுலத்தின் அடுத்தகட்ட விண்வெளித் தேடலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

