இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ், ஹோண்டா, யமஹா, ராயல் என்ஃபீல்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள சில முக்கிய புதிய இரு சக்கர வாகனங்களின் பட்டியல் இதோ:
1. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக், இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 4 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2. ஹீரோ கர்மா XMR 250: ஹீரோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள ஸ்டைலான ஸ்போர்ட்டி பைக் இது. இதன் விலை 2 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 250 சிசி எஞ்சினுடன் வரும் இந்த பைக், இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஹார்லி-டேவிட்சன் X350 T: ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, Harley-Davidson X350 T என்ற புதிய பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை 2 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4. பிஎம்டபிள்யூ F 450 R: கார் சந்தையில் சிறந்து விளங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது இரு சக்கர வாகனங்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, BMW F 450 R என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. கேடிஎம் 125 டியூக்: இளைஞர்களின் விருப்பமான பைக்காக கேடிஎம் திகழ்கிறது. இந்திய சந்தையில் இவர்களது பைக்குகளுக்கு தனி வரவேற்பு உள்ள நிலையில், புதியதாக KTM 125 Duke பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. 125 சிசி எஞ்சினுடன் வரும் இந்த பைக், 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை விலை இருக்கலாம் எனவும், இது மிகப்பெரிய வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
6. ஹீரோ ஸ்கிராம்ப்ளர் 440: ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு முக்கிய எதிர்பார்க்கப்படும் இரு சக்கர வாகனம் இது. இந்த பைக் அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 440 சிசி எஞ்சினுடன் வரும் இதன் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக்குகள் அனைத்தும் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், இவை பெரும் வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

