தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாக கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விற்பனை செய்வதில் உழவர்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மறுபுறம், கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர, நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150 மற்றும் நெல்லாக ரூ.175 என மொத்தம் ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தனியார் வணிகர்களை விட அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைப்பதால் உழவர்கள் இங்கு வருகின்றனர். இருப்பினும், அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால், உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள் என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி கிடைக்காத நிலை உருவாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா?' என்று கேட்டபோது, உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவங்கள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க ஆட்சியாளர்கள் விரும்புவதை காட்டுவதாகவும், இது வரவேற்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கொள்முதல் நிலைய ஊழலுக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்யாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை என்றும், உழவர்களும் பயனடையப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு பெறப்படுவதற்கு, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்குப் போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும், தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும், ஆனால் அது முறையாக வழங்கப்படவில்லை. நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல போன்ற காரணங்களையும் பணியாளர்கள் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் சரி செய்தால் மட்டுமே கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும் என பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாசாரம் புதிதாகத் தோன்றியதல்ல; பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல் தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களைத் தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

