இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் ஸ்ரீகாந்த், நடராஜனின் சம்பளம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி போன்ற எந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல், ஐபிஎல் மூலம் மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆண்டுக்கு சுமார் 40 நாட்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடும் நடராஜனுக்கு, ஐபிஎல் அணிகள் அதிக ஊதியம் வழங்குவதாக ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில், நடராஜன் டெல்லி அணியிலிருந்து ஹைதராபாத் அணிக்கு மாற்றப்பட்டார். அதே சமயம், ஹைதராபாத் அணி ஜீசன் அன்சாரியை டெல்லி அணிக்கு விட்டுக் கொடுத்தது. ஏற்கனவே ஷகிப் ஹுசைன், பிரபுல் ஹிங்கே போன்ற வீரர்கள் ஹைதராபாத் அணியில் இருக்கும்போது, நடராஜனை அணிக்குள் கொண்டு வந்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நடராஜனின் ஊதியம் ரூ.10.75 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், 35 வயதாகும் அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவே கருதப்படுகிறது. இது குறித்து பேசிய கிறிஸ் ஸ்ரீகாந்த், 'நடராஜனுக்கு இது மிகச்சிறந்த ஆஃபர் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் அவர் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார். ரஞ்சி டிராபி போன்ற தொடர்களில் அவர் விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் அணிகள் அவருக்கு நல்ல ஊதியம் வழங்குகின்றன' என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனின் கிரிக்கெட் ஆட்டம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். ஷகிப் ஹுசைன் மற்றும் பிரபுல் ஹிங்கே போன்ற வீரர்கள் இருக்கும்போது, நடராஜனை ஏன் வாங்கினார்கள் என்பது புரியவில்லை என்றும், இதனால் ஹைதராபாத் அணி வேறு சில வீரர்களை விடுவிக்க திட்டமிடலாம் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, உனாத்கட் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோரை ஹைதராபாத் அணி அணியிலிருந்து நீக்க முடிவு செய்திருக்கலாம் என்றும் அவர் கணித்துள்ளார். பிரபுல் ஹிங்கே மற்றும் ஷகிப் ஹுசைன் ஆகியோரை எதிர்காலத்திற்கான வீரர்களாக ஹைதராபாத் அணி கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ஜீசன் அன்சாரியை டெல்லி அணிக்கு விட்டுக் கொடுத்தது சரியான முடிவு அல்ல என்றும் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்தார். டெல்லி அணிக்கு மைதானம் சிறியது என்பதால், அங்கு அவரால் பந்துகளை சிறப்பாக வீச முடியுமா என்பதில் சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நடராஜன் ஹைதராபாத் மைதானத்தில் யார்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசவில்லை என்றால், அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும், இல்லையெனில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் பறக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

