நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் எப்படி உருவாகின்றன, பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்களும் அவற்றின் மையத்தில் உள்ள கருந்துளைகளும் எவ்வாறு வளர்ந்தன என்பதை ஆய்வு செய்ய நாசா ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 'ப்ரிமா' (PRIMA – PRobe far-Infrared Mission for Astrophysics) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி திட்டம், தற்போது தனது ஆரம்பக்கட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னேறியுள்ளது.
மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்வெளி ரகசியங்களை மனிதகுலம் ஆச்சரியத்துடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு உலகையும், ரோமன் விண்வெளி தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பரந்த காட்சிகளையும் நமக்குக் காட்டியுள்ளன. ஆனால், இந்த இரண்டு பெரிய சாதனங்களுக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருந்தது – கண்ணுக்குத் தெரியாத அந்தத் தொலைதூர அகச்சிவப்பு கதிர்களின் மர்மம்.
இந்த மர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நாசா ஒரு புதிய பயணத்திற்குத் தயாராகிவிட்டது. அதுதான் 'ப்ரிமா' தொலைநோக்கி திட்டம். நாசாவின் நீண்ட கால எக்ஸ்புளோரர்ஸ் திட்டத்தின் கீழ், 'புரோப் எக்ஸ்புளோரர்ஸ்' என்ற புத்தம் புதிய வகை விண்வெளி ஆய்வுப் பிரிவை நாசா உருவாக்கியுள்ளது. அந்தப் பிரிவின் முதல் பெருமைமிக்க உறுப்பினர்தான் இந்த ப்ரிமா தொலைநோக்கி.
மனிதகுலத்தின் அடுத்த விண்வெளிப் பார்வையாகக் கருதப்படும் இந்த ப்ரிமா, வழக்கமான ஒளியியல் தொலைநோக்கிகளால் பார்க்க முடியாத தொலைதூர அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை ஆராயும். நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே கோள்கள் எவ்வாறு பிறக்கின்றன, அங்கே இருக்கும் குளிரான தூசி மற்றும் வாயுக்களின் பங்கு என்ன போன்ற பல கேள்விகளுக்கு இது பதிலளிக்கும்.
மேலும், விண்மீன் திரள்களும் அவற்றின் மையத்திலுள்ள பிரம்மாண்ட கருந்துளைகளும் கோடிக்கணக்கான ஆண்டுகளில் எவ்வாறு வளர்ந்தன என்பதையும் இது துப்பறியும். இந்த பிரம்மாண்ட தொலைநோக்கியானது 1.8 மீட்டர் (5.9 அடி) அகலமுடையது. இதன் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், வரும் 2033 ஆம் ஆண்டில் இது விண்ணில் ஏவப்படும்.
ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும் இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு, ஏவுதல் மற்றும் இதர செலவுகள் நீங்கலாக, சுமார் 1.2 பில்லியன் டாலர்களாக வரம்பிடப்பட்டுள்ளது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (JPL) இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்துகிறது.
இவர்களுடன் அமெரிக்காவின் பிற மையங்களும், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற உலக நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. நமது பூமி போன்ற உலகங்களும், கோள்களும், விண்மீன்களும் எப்படி உருவானவை என்ற புதிரின் விடுபட்ட கடைசித் துண்டுதான் இந்த ப்ரிமா தொலைநோக்கி.
பிரபஞ்சத்தின் ஆதி ரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட வரவிருக்கும் இந்த விண்வெளிப் பயணம், அறிவியலின் அடுத்த பெரிய பாய்ச்சலாகப் பார்க்கப்படுகிறது.

