பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பரவலாக கவனம் பெற்று வருகின்றன.
நாட்டு மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடியை, கொள்கை ரீதியாகவும் சித்தாந்த அடிப்படையிலும் எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ், தற்போது ஆபாச அரசியலை முன்னெடுத்துள்ளது என்றும், இது அருவருக்கத்தக்க செயல் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு தலைவர்களுடனான இந்திய பிரதமரின் நட்புறவை இவ்வளவு இழிவாக வர்ணிக்கும் ராகுல் காந்தி, நிச்சயம் உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். அரசியலில் 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசியக் கட்சியின் வாரிசாக இருந்தபோதிலும், ஒரு புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், ராகுல் காந்தியால் ஏன் அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை அவரே நிரூபித்துவிட்டார் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
உங்களைப் போன்ற அரசியல் முதிர்ச்சியற்ற ஒருவரால், காங்கிரஸ் கட்சியின் முடிவுரை எழுதப்படும் என்பதை இந்திரா காந்தி அம்மையார் கூட தனது கனவில் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கள், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

