அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு ஆய்வு என்ற பெயரில் சென்ற அமைச்சர் கீர்த்தனா, அங்குள்ள குழந்தைகளின் ஆங்கில அறிவு மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மாணவர் முன்னிலையிலேயே குறை கூறியதுடன், "Last Bench" மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என முத்திரை குத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற ஆய்வுகள், நேர்காணல் நடத்தும் கார்ப்பரேட் முதலாளி போல மாணவர்களைத் திணற வைப்பதாகவும், ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். அமைச்சர்கள் கேமராமேன்களுடன் செல்வதாகவும், ஆய்வு செய்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என்றும், அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, அமைச்சர் கீர்த்தனா இதற்கு பதிலளித்துள்ளார். தான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல என்றும், அது தனது தொகுதி என்றும் அவர் கூறினார். அந்த மாணவர்களின் குரலை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது தனது உரிமையும் கடமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

தான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள் என்றும், இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே தன்னைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தானே நேரடியாக அனுபவித்ததாகவும், அதனால் இந்த மாணவர்களின் எதிர்காலம் தனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version