இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 'முரசு' புயல் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA) பொதுமக்களுக்கான அவசர வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புயல் தற்போது தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்தாலும், அடுத்த சில நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும், ஆனால் அனைவரும் விழிப்புடன் இருந்து, எளிய நடைமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சந்தர மோகன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புயல் காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர் அலைகள் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரையோரச் சாலைகளான ECR, OMR போன்ற பகுதிகளில் நீர் தெறிக்க வாய்ப்புள்ளதால், கடற்கரை நடைபாதைகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீரின் ஆழம் தெரியாத நீர் தேங்கிய சாலைகளிலும், தாழ்வான சுரங்கப்பாதைகளிலும் நடப்பதையோ அல்லது வாகனங்களை ஓட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களான போதுமான குடிநீர், தேவையான மருந்துகள், அவசர விளக்குகள் அல்லது டார்ச் லைட்கள், மற்றும் பவர் பேங்குடன் சார்ஜ் செய்யப்பட்ட கைப்பேசிகள் போன்றவற்றை வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும். பலத்த காற்றில் பறந்து செல்லக்கூடிய, பொருத்தப்படாத தகரத் தகடுகள், விளம்பரப் பலகைகள் அல்லது எடை குறைந்த வெளிப்புறப் பொருட்களைப் பாதுகாப்பாகக் கட்டி வைக்குமாறும், மழைநீர் தடையின்றி வெளியேற மாடி மற்றும் பால்கனி வடிகால் வாய்களைச் சுத்தம் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வானிலைச் செய்திகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA), இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். அவசரகால உதவி எண்களான மாநில அவசர உதவி எண் 1070 மற்றும் மாவட்ட அவசர உதவி எண் 1077 ஆகியவற்றைத் கையில் வைத்திருக்க வேண்டும்.
கடற்கரைகள் அல்லது கடலோரச் சாலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் நேரத்தில் பொழுதுபோக்கு, புகைப்படம் எடுத்தல் அல்லது சுற்றிப்பார்ப்பதற்காகக் கடற்கரை, துறைமுக நடைமேடை அல்லது கடலோரச் சாலைகளுக்குச் செல்வது ஆபத்தானது. மீனவர்கள் நவம்பர் 4 ஆம் தேதி காலை வரை கடலுக்குள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரமான மற்றும் காற்று வீசும் வானிலையில் தெருவிளக்குகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் அறுந்து விழுந்த மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். மின் கம்பங்கள் அல்லது மின் கம்பிகளைத் தொடக்கூடாது. மேலும், பாதுகாப்பற்ற கூரைகள், பலவீனமான குடிசை வீடுகள் அல்லது இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தினால், அவர்கள் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத வதந்திகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற பீதியூட்டும் செய்திகளையோ அல்லது சரிபார்க்கப்படாத வானிலை வதந்திகளையோ பகிரவோ அல்லது பகிர்ந்து அனுப்பவோ வேண்டாம் என்று அந்த செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் 'முரசு' புயலின் தாக்கத்திலிருந்து நம்மையும் நமது உடைமைகளையும் பாதுகாக்கலாம்.

