பிரதமர் மோடி அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் 50% குறைப்பு, மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணிகளைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, தனது அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, பாதுகாப்பு அணிவகுப்புகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலில், சிக்கனமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும், அதற்கேற்ப நாம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், விவசாயத் துறையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை உரங்களை நோக்கி நகர வேண்டும் என்றும், சமையல் எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றது போல, தற்போதைய சூழலையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, வழக்கமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தும்போது புதிய அதிநவீன வாகனங்கள் வாங்கப்படுவதுண்டு. ஆனால், இந்த முறை மத்திய அரசின் நிதியிலிருந்து புதிய மின்சார வாகனங்களை வாங்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். இந்த மாற்றங்கள் அனைத்தும் பிரதமரின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version