50% தொகுதி உயர்வு ஆசை காட்டி.. ஒன்றிய அரசின் சதி: மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

இந்தியாவின் இறையாண்மை மற்றும் கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் 'மோடி-லிமிட்டேஷன்' என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒரு மிகப்பெரிய அரசியல் சதியை அரங்கேற்ற முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த கருத்துக்கள் விரிவாக பகிரப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட ஒரு ஆபத்தான மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மசோதாவை ஏன் நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த தொகுதி இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். கடந்த காலங்களில் அன்னை இந்திரா காந்தி அவர்களும், 2001-ல் வாஜ்பாய் அவர்களும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பா.ஜ.க. துடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இந்த தொகுதி மறுவரையறை முயற்சியை மேற்கொண்டால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 9 – வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது வெறும் செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல என்றும், அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம் என்றும், தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த அனைவரும் வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version