விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, அவரை அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் (X) தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதை 'சோஃபா மாடல்' அரசு என விமர்சித்த உதயநிதி, இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக, மக்கள் பிரதிநிதி என்றுகூடப் பார்க்காமல், அதிகாலை 6 மணிக்கே காவல்துறையை அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடைத்து வைப்பது உச்சபட்ச அடக்குமுறை என்று உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது அரசின் அராஜகப் போக்கைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதே தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றம் சாட்டப்பட்ட த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தவிதமான கைது நடவடிக்கையும் இன்றி லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழலில், கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறிவைத்து காவல்துறை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தும்போது, ஆளுங்கட்சிக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது எதிர்க்கட்சியின் மாபெரும் ஜனநாயகக் கடமை என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அரசின் அராஜகப் போக்கையும், பேசினாலே கைது செய்யும் நடவடிக்கையையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளைச் செய்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்றும், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவைச் சந்திப்பது உறுதி என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் த.வெ.க.வினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், இரண்டு அமைப்பு அல்லது கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

