சென்னையில், காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி, வீட்டில் இருந்த சுமார் 129 பவுன் தங்க நகைகளை திருடி கொடுத்த 18 வயது சிறுமி மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (51), தனது அண்ணன் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று மகள்களை கவனித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, தனது சொந்தமான 22 பவுன் தங்க நகைகளை அண்ணியிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறு கூறியுள்ளார். சமீபத்தில், வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, பன்னீர்செல்வம் கொடுத்த 22 பவுன் நகைகள் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான 107 பவுன் நகைகள் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டின் கதவோ, பீரோவோ உடைக்கப்படாததால், வீட்டில் உள்ள நபர்கள் யாரேனும் நகைகளை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், பன்னீர்செல்வத்தின் அண்ணனின் மூன்றாவது மகளான 18 வயது சிறுமியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர் விசாரணையில், கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின்போது, சிறுமி தற்காலிகமாக வேலை செய்த இடத்தில், செனாய் நகரைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கார்த்திக், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி, சிறுமியிடம் நயமாக பேசி பணம் கேட்டுள்ளார்.
காதலனின் வார்த்தைகளை நம்பிய சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். கார்த்திக் தொடர்ந்து பணம், நகை என கேட்க, வீட்டில் இருந்த 129 பவுன் தங்க நகைகளையும் சிறுமி அவனிடம் கொடுத்துள்ளார். ஏமாந்த சிறுமியிடம் இருந்து பெற்ற நகைகளை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும், விற்றும் பணமாக்கியுள்ளனர்.
அந்த பணத்தில், அவர்கள் புதிதாக கார், இருசக்கர வாகனம், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான ஆவடியைச் சேர்ந்த குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47), சூர்யா (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போன், ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடி கொடுத்த சிறுமியின் இந்த விபரீத செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

