ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே டாஸ்மாக் மதுபானங்கள் விநியோகம் செய்யப்படாது என்று அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். 'வீடு தேடி மதுபானம் வரும்' என்று பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் சோதனை அடிப்படையில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் மதுபானங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது ஒரு தவறான தகவல் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். "மதுபானம் என்ன அத்தியாவசியப் பொருளா? அதை வீட்டிற்கே டெலிவரி செய்ய?" என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரு குறிப்பிட்ட கூட்டம் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆன்லைனில் மதுபானங்களுக்கு முன்பதிவு செய்யலாம் என்றாலும், வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்றுதான் மதுவை வாங்க வேண்டும். ஆன்லைன் மூலம் நேரடியாக மதுபானங்களை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், ஆன்லைன் முன்பதிவு மூலம் மதுபானங்களுக்கு வயது உறுதி செய்யப்படும் என்றும், 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
மதுபானங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் கூறினார். மக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை என்றும், ஊழலைக் குறைப்பதன் மூலமே அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பாட்டிலுக்குக் கூடுதல் ரூபாய் வசூலிக்கும் நடைமுறை 2011 ஆம் ஆண்டு முதலே இருந்து வருவதாகவும், தற்போதைய அரசு மட்டுமே இதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

