எடப்பாடியின் கனவு தகர்ந்தது: அமைச்சர் செங்கோட்டையன் தாக்கு

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அகந்தையே காரணம் என கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய வேண்டும் என இளைஞர்கள், பெண்கள், ஏன் சிறுவர்கள் கூட விரும்பியதாக அவர் குறிப்பிட்டார். பணமில்லா தேர்தலை நடத்தி, நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்தவர் முதல்வர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.

மேலும், தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாகவும், இந்தியாவுக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநிலமாகவும் விளங்கப்போகிறது என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு முழு பாதுகாப்பு, குழந்தைகள் போதைக்கு அடிமையாவதை தடுத்தல், மதுக்கடைகளை அகற்றுதல் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே திகழ்வார் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் மீதும், கட்சியை வளர்த்த தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்கே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தானே நிறைவேற்றியதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை விட தன் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டு விழா நடத்தியதை அவர் நினைவு கூர்ந்தார். 'நான்தான் எல்லாம்' என்ற எடப்பாடியின் கனவு தகர்ந்துவிட்டதாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மா அவருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தன் சட்டைப்பையில் ஜெயலலிதா படம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version