தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமைச்சர் கீர்த்தனா தனது பள்ளி கால புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'சிலர் அரசு பள்ளி மாணவியை கேலி செய்கிறார்கள் என்ற பொய்யான கதையை பரப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நானே ஒரு அரசு பள்ளி மாணவிதான். தமிழ் வழிக் கல்வியில் படித்தவள் நான். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்பவர்கள், என்னை மட்டுமல்ல, என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ, பிரெஞ்ச் போன்ற மொழிகளை இரண்டாம் மொழியாக படிக்கும் வாய்ப்போ கிடைக்கவில்லை. கார்ப்பரேட் உலகிற்குள் நுழைந்தபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன், ஆனால் அதிலிருந்து கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்பவர்கள், நாளை இதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையோ, தமிழ் வழி மாணவியையோ இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி கூற முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
'ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். என்னை விமர்சியுங்கள், என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, 'பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்' என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இறுதியாக, 'இன்று என்னை கேலி செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்' என்று அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது. அமைச்சர் கீர்த்தனாவின் இந்த பதில், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

