மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பது வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்துவிடக் கூடாது என டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு முரணாக செயல்படும் கர்நாடக அரசின் பிடிவாதத்தை கடந்த காலங்களில் சரியாக எதிர்கொள்ளாததன் விளைவே, தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்து பேசும் துணிச்சலை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவில்லை என்றால், காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்யும் தவெக அரசு, தனது அதிகாரத்தை தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை கர்நாடக அரசிடம் விட்டுக்கொடுத்தால், அது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகமாக அமையும். எனவே, தவெக அரசு, தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version