எல்பிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங்: இந்திய வீரர் மன்ஜோத் கல்ரா கைது

மேட்ச் ஃபிக்சிங் புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் மன்ஜோத் கல்ரா

இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரில் மேட்ச் ஃபிக்சிங் புகாரில், 2018-ல் இந்திய அண்டர் 19 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீரர் மன்ஜோத் கல்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக அண்மையில் இணைந்திருந்தார்.

இலங்கை விளையாட்டுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவு, எல்பிஎல் 2026 தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கொழும்பில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து மன்ஜோத் கல்ராவைக் கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. போட்டியின் முடிவை மாற்ற ஒரு வீரருக்கு சுமார் ரூ.9.5 மில்லியன் பணம் கொடுக்க மன்ஜோத் கல்ரா முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மேட்ச் ஃபிக்சிங் முயற்சி குறித்து சம்பந்தப்பட்ட வீரர் முன்கூட்டியே புகார் அளித்ததை அடுத்து, நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்ஜோத் கல்ரா விரைவில் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எல்பிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாகவே யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குழுவில் மன்ஜோத் கல்ரா இணைந்திருந்தார். இந்த கைது நடவடிக்கை அரங்கேறிய நிலையிலும், திட்டமிட்டபடி தொடர் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்த விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

மன்ஜோத் கல்ரா, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த அணியில் பிரித்வி ஷா, ஷுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடினார். அந்த தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 84 சராசரியுடன் 252 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், 217 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 38.5 ஓவர்களில் எளிதாக எட்ட கல்ராவின் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். எனினும், வயது மோசடி புகாரில் சிக்கியதால் அவரால் கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் போனது. அவர் தனது தொழில்முறை வாழ்க்கையில் ஒரே ஒரு லிஸ்ட் ஏ போட்டியிலும், இரண்டு டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்த திடீர் கைது நடவடிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்பிஎல் தொடரின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இணைந்து இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்ஜோத் கல்ராவின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version