மாலை நேர ஒளியின் மாயம்: சினிமா தந்த பொன்னான தருணங்கள்!

திரைப்படங்கள் காலத்தை சிறைபிடிக்கும் கலை. இதில் மாலை நேரத்து வெளிச்சம், ஒரு உணர்ச்சிகரமான விடைபெறலை நமக்கு உணர்த்தும். பகல் முடிந்து இரவு தொடங்கும் அந்த இடைப்பட்ட தருணத்தை ஒளிப்பதிவாளர்கள் 'மேஜிக் ஹவர்' அல்லது 'கோல்டன் ஹவர்' என அழைக்கின்றனர். இந்த நேரத்தில் ஒளி மென்மையாகவும், நீண்ட நிழல்களை உருவாக்குவதாகவும் இருக்கும். இந்திய சினிமாவில், குறிப்பாக '1942: எ லவ் ஸ்டோரி' போன்ற படங்களில், இந்த ஒளியை தேசபக்தி மற்றும் காதலோடு இணைத்த பெருமை ஒளிப்பதிவாளர் பினோத் பிரதானைச் சாரும்.

சூரியன் அடிவானத்தை நெருங்கும் அந்த 20 முதல் 30 நிமிடங்கள் 'மேஜிக் ஹவர்' எனப்படுகிறது. இதன் தன்மையே, ஒளி மிகவும் சரிவாக (Low Angle) இருப்பதுதான். இது கதாபாத்திரங்களின் முகத்தில் மென்மையான பொன்னிறத்தைப் பூசும். அழகியலைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் விழும் நிழல்கள் மிக நீளமாகவும், மென்மையாகவும் இருக்கும். இது காட்சிகளுக்கு ஒருவிதமான 'நாஸ்டால்ஜியா' அல்லது காவியத் தன்மையை வழங்குகிறது. '1942: எ லவ் ஸ்டோரி' படத்தில், காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தைக் காட்ட இந்த 'மேஜிக் ஹவர்' ஒளி பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் அனில் கபூர் மற்றும் மனிஷா கொய்ராலா முகங்களில் விழும் அந்த மென்மையான மாலை நேர வெளிச்சம், ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும். சூரியன் மறையும்போது ஏற்படும் 'பேக் லைட்டிங்', மனிஷா கொய்ராலாவின் கூந்தலைச் சுற்றி ஒரு தங்க நிற வளையத்தை உருவாக்கியது.

நவீன சினிமாவில் 'மேஜிக் ஹவர்' ஒளிப்பதிவுக்கு 'ரங் தே பஸந்தி' ஒரு சிறந்த பாடமாக விளங்குகிறது. இதில் ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான் மீண்டும் தனது மேஜிக்கைச் செய்துள்ளார். தோராஹா கோட்டை காட்சிகள் மற்றும் 'துபு துபு' பாடல் காட்சிகள் அனைத்தும் மாலை நேர ஒளியில் படமாக்கப்பட்டவை. நிகழ் கால இளைஞர்கள் மற்றும் கடந்த காலப் புரட்சியாளர்கள் ஆகிய இரு காலக்கட்டங்களை இணைக்கும் ஒரு பாலமாக அந்த மங்கும் வெளிச்சம் பயன்படுத்தப்பட்டது. சூரியன் மறையும் அந்த தருணத்தில் நண்பர்கள் கோட்டையிலிருந்து குதிப்பதும், அந்த செந்நிற வானமும் அவர்களின் துடிப்பான இளமையையும், அதே நேரம் அவர்களுக்குக் காத்திருக்கும் ஒரு சோகமான முடிவையும் குறிப்பால் உணர்த்தும்.

மாலை நேர ஒளிப்பதிவைப் பற்றி பேசும்போது நெஸ்டர் அல்மெண்ட்ரோஸைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. டெரன்ஸ் மாலிக் இயக்கிய 'Days of Heaven' படத்திற்காக அவர் ஆஸ்கர் விருதை வென்றார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சூரியன் மறையும் அந்த 20 நிமிடங்களில் மட்டுமே படமாக்கப்பட்டன. செயற்கை விளக்குகளைத் தவிர்த்து, அந்த இயற்கையான மங்கும் ஒளியையே அல்மெண்ட்ரோஸ் நம்பினார். ஒரு நாளைக்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவதால், படக்குழு அந்த சிறு பொழுதுக்காக நாள் முழுவதும் காத்திருந்து படம் பிடித்து ஒரு உலக சாதனையைச் செய்தது. மாலை நேரத்தின் மௌனத்தில், சில்ஹவுட், லென்ஸின் அப்​சர்​சரை திறந்து கொண்டே இருப்பது, லென்ஸ் ஃபிளேர் போன்ற நுட்பங்கள் மூலம் ஒளிப்பதிவாளர்கள் மாயாஜாலம் செய்கின்றனர். அதிகாலை வெளிச்சம் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தால், மாலை நேர வெளிச்சம் ஆழமான தேடலையும் வரலாற்றின் நினைவுகளையும் தருகிறது. ஒளிப்பதிவாளராக, மங்கும் ஒளியைப் பிடிப்பது என்பது இருளுடன் நடத்தும் ஒரு ஓட்டப்பந்தயம். அந்தப் பந்தயத்தில் ஒளியின் கடைசித் துளியையும் கேமராவுக்குள் சிறைபிடிப்பவர்களே சிறந்த கலைஞர்கள்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version