திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் தம்பதியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, 'மனைவிக்கு நிகராக கணவரும் வீட்டுப் பொறுப்புகளை ஏற்கலாம்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தை பதிவு செய்துள்ளது. இது திருமண உறவுகளையும் குடும்ப அமைப்பையும் பாதுகாக்க உதவும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த தம்பதியினர் 2011-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2012 மற்றும் 2016-ல் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். கணவர் கார்டியாலஜி படிப்பில் மேற்படிப்பு படிக்க விரும்பியதால், மனைவி தனது பெற்றோருடன் தங்கி குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். 2020 கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இருவரும் ஒரே இடத்தில் வாழ்ந்தாலும், கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சனை எழுந்துள்ளது.
இந்நிலையில், திருமண உரிமைகளை மீட்டெடுக்க மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதே சமயம், கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால், இருவரும் தனித்தனியே உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது, நீதிபதிகள் முக்கிய கருத்துக்களைப் பதிவு செய்தனர். 'நமது பண்பாட்டில் குடும்பமே அடிப்படை அலகு. பொருளாதாரத்தை ஈட்டும் பொறுப்பும், வீட்டை பராமரித்துக் கொள்ளும் பொறுப்பும் சமமான மரியாதைக்கு உரியவை. பெண்கள் தங்கள் பணி வாய்ப்புகளுக்கு திருமணம் தடையாக இருப்பதாக உணர்வதால், திருமணத்தை தவிர்க்கும் நிலை உள்ளது. இதனால் திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கணவர்கள் வீட்டுப் பொறுப்பை ஏற்றால் இந்த நிலைமை மாறக்கூடும். ‘HOUSE WIFE’ இருக்க முடியும் என்றால் ‘HOUSE HUSBAND’-களும் இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக அமைந்தால், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை பாதுகாக்க உதவும் என நாங்கள் கருதுகிறோம். வீட்டு பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது. மனைவி வீட்டுப் பராமரிப்பாளராக ஆற்றும் பணிகள் பொருளாதார மதிப்பு மிக்கவை என்பதை உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது' என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, கணவர் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டரை கோடி ரூபாயை வழங்க ஒப்புக்கொண்டார். மனைவியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகிறது.
'உத்தரவு நகல் கிடைத்ததில் இருந்து 3 மாதங்களுக்குள் ஒன்றரை கோடி ரூபாயை மனைவியின் வங்கிக் கணக்கிலும், ஒரு வருட காலத்திற்குள் குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் தலா ரூ.50 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். இந்த தீர்ப்பு, குடும்ப அமைப்பில் கணவன், மனைவியின் பங்களிப்பு குறித்த புதிய சிந்தனையை விதைத்துள்ளது.

