அரசு விடுதிகளில் மாட்டுக்கறி: வன்னியரசுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

சமூக நீதித் துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு விபரீதமான முடிவு என்றும், உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மாதக் கட்டணத்தை 150 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது.

தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை கணிசமாக உயர்த்த வேண்டியுள்ளது. உணவில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். இதை உறுதிசெய்ய, தினமும் முட்டை மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு தனிநபருக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறுபடும். அசைவப் பிரியர்களில் பலர் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர். ஆனால், மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியும் இல்லை. இது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களின் பழக்கவழக்கங்கள் ஆகும்.

பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தனிப்பட்ட விருப்பத்தை, சில மாணவர்களின் கோரிக்கை போல பொது விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது மிகவும் தவறான அணுகுமுறை. வன்னியரசு போன்ற பொறுப்பில் இருப்பவர் இதுபோன்ற விபரீதமான முடிவை எடுக்க மாட்டார் என நம்புகிறோம்.

அமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது, தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது. மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி பரிசீலிக்கப்படும் என்ற அவரது கருத்து தவறானது, குற்றமானது, கண்டிக்கத்தக்கது மற்றும் தண்டிக்கத்தக்கது. இது எந்தவிதமான பரிசீலனைக்கும் தகுதியற்றது.

உடனடியாக அவர் மாட்டிறைச்சி குறித்த தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஒருவேளை அதை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமைச்சரவையில் இருக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம் என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனவே, வன்னியரசு தனது மாட்டிறைச்சி குறித்த கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version