2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் இந்திய அணிக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்த முடிவு முற்றிலும் அந்த வீரர்களின் கைகளில்தான் உள்ளது. அவர்கள் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்களா, தங்களது உடற்தகுதியை அவர்களால் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியுமா, தேர்வுக்குழுவினரின் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய வீரர்களுடன், அவர்கள் அணியில் இல்லாத பட்சத்தில், பலம் வாய்ந்த மாற்று வீரர் நம்மிடம் இருக்கிறாரா என்பதையும் நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும். இந்திய அணியின் பெஞ்ச் பலத்தைப் பார்க்கும்போது, விராட் அல்லது ரோஹித் அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்தப் பிரச்சினையும் வராது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
இந்த இருவரும் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். அவர்கள் எப்போதும் ஜாம்பவான்களாகவே கருதப்படுவார்கள். குறிப்பாக, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த வீரராக திகழ்ந்துள்ளார். விராட் கோலியைப் பொறுத்தவரை, அவரைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அது குறைவாகவே இருக்கும் என்று சந்தீப் பாட்டீல் புகழ்ந்துரைத்தார்.
இதே உரையாடலின் போது, ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னரும் இந்திய அணியின் பந்துவீச்சு பலம் குறையாது என்றும் சந்தீப் பாட்டீல் குறிப்பிட்டார். இது குறித்து பேசிய அவர், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய 3 அல்லது 4 பந்துவீச்சாளர்கள் நம்மிடம் உள்ளனர், அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா சென்ற பிறகு இந்திய பந்துவீச்சு முற்றிலும் முடங்கிவிடும் என்று கூற முடியாது. யாராவது ஒருவர் நிச்சயமாக சிறப்பாக உருவெடுப்பார்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்திற்கு வி.வி.எஸ் லக்ஷ்மனுடன் சென்றிருந்தேன். அங்குள்ள வசதிகளைப் பார்க்கும்போது பிசிசிஐ மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய வசதிகளுடன், இந்திய கிரிக்கெட் சிறந்த பந்துவீச்சாளர்களை மட்டுமல்ல, சிறந்த பேட்டர்களையும் தொடர்ந்து உருவாக்கும் என்பதில் நான் 100% உறுதியாக இருக்கிறேன், என்றார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை அன்று ஜப்பானுக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பிறகு வரும் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

