கொடைக்கானல் மலைப்பாதையில் காரின் மேற்கூரையில் அல்லது ஜன்னல்களில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் வரும் சில இளைஞர்கள், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் எடுப்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஓடும் காரின் சன்ரூஃப் மற்றும் ஜன்னல்களில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். செங்குத்தான மலைப்பாதையில் இது போன்ற செயல்களால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த ஆபத்தான பயணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கொடைக்கானல் மலைச்சாலையில் பொதுமக்களுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கார்களின் மீது அமர்ந்தோ அல்லது ஜன்னல்களில் தொங்கியபடி சாகசப் பயணம் மேற்கொள்ளவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி செயல்படுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்' என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும், வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் வரையிலான மலைச்சாலையில் உள்ள முக்கியக் கொண்டைஊசி வளைவுகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் போக்குவரத்துப் போலீசாருக்கு எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கைகளால் கொடைக்கானல் மலைச்சாலையில் இனி இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

