முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். மு.க. ஸ்டாலின் கூறியது உண்மைக்கு புறம்பானது என்றும், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாக்க அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய், 27.05.2026 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
மேலும், 19.06.2026 அன்று, கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடிதம் மூலம் பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பி வைத்தார். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது என்றும், இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரினார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில், மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, 13.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசி வாய்ப்பாக இருந்த மறுசீராய்வு மனு மீதும், உரிய வாதங்களை வலுவாக தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை என்றும், அதனால் அதுவும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான் காவிரி நதி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது என்றார்.
கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப தாங்கள் விரும்பவில்லை என்றும், குறுகிய அரசியல் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்லது வேறு யாரிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்ளவும், ஏற்கவும் தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல, அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து செயல்படும் என்றும், காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் என்றும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் என்றும் அவர் தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.

