ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நேற்று (மே 14) வெளியாகவிருந்த இப்படம், சில எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால், கருப்பு சட்டை அணிந்து, ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் ஏமாற்றமடைந்தனர்.
படத்தின் வெளியீடு தாமதமானதால், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டு, திரைப்படம் இன்று வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பட வெளியீட்டுக்கான புதிய தேதியுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டது.
ரசிகர்களின் காத்திருப்பு வேதனையானது என்பதை நாங்கள் அறிவோம். உங்களில் பலர் இந்தப் படத்தை மிகுந்த அன்போடும் எதிர்பார்ப்போடும் நெஞ்சில் சுமந்திருந்தீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஒவ்வொரு தாமதமும் எங்கள் மீதும் பெரும் சுமையாகவே அழுத்தியது. ஆனால், ஒவ்வொரு பின்னடைவின் போதும், உங்கள் ஆதரவும், உங்கள் செய்திகளும், உங்கள் நம்பிக்கையும், உங்கள் எல்லையற்ற அன்புமே இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன. காலத்தை மட்டுமல்ல, இதயத்தையே சோதிக்கும் சில பயணங்கள் உண்டு. 'கருப்பு' படத்திற்காகக் காத்திருந்த, படம் குறித்துத் தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருந்த, மவுனமும் தாமதங்களும் சூழ்ந்திருந்த காலத்திலும் எங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் ஒரு மன்னிப்பையும், அதைவிட முக்கியமாக, எங்கள் நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்.
இன்று, மிகுந்த மகிழ்ச்சியோடும், நன்றிக் கண்ணீரோடும் நாங்கள் இறுதியாக அறிவிக்கிறோம். 'கருப்பு' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது! இந்தப் படத்தில் எங்கள் ரத்தமும், வியர்வையும், உறக்கமற்ற இரவுகளும், போராட்டங்களும், உணர்வுகளும் கலந்திருக்கின்றன. இது இனி வெறும் எங்கள் கதை மட்டுமல்ல — இந்தப் பயணத்தில் எங்கள் துணையாக நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான கதை இது. காத்திருந்தமைக்கு நன்றி. நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்!', என்று படத் தயாரிப்பு நிறுவனம் உருக்கமாக தெரிவித்துள்ளது.

