கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியலாம்: அரசு அனுமதி

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இனி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மத அடையாள ஆடைகளை கல்வி நிறுவனங்களில் அணியத் தடை இல்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தபோது, மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, இந்தத் தடையை நீக்கி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாம் என உத்தரவிட்டுள்ளது. இதில் ஹிஜாப், பூணூல், புனித கயிறு, ருத்ராட்சை மாலை, தலைப்பாகை போன்றவையும் அடங்கும்.

இந்த புதிய உத்தரவு கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும், மத அடையாள ஆடைகளை அணிந்து வரும் மாணவர்களை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் மது பங்காரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் சாசன மாண்புகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இனி மாணவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளின்படி ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரலாம்.

சமீபத்தில் நடந்த ஒரு நுழைவுத் தேர்வில், பூணூல் அணிந்திருந்த சில மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத சம்பவங்கள் நடந்தன. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என அமைச்சர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், தேசிய மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளின்போது, ஆடை கட்டுப்பாடுகள் குறித்து அந்தந்த தேர்வு ஆணையங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிய வற்புறுத்தப்பட மாட்டார்கள், அதேபோல் அவற்றை அகற்றும்படியும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version