கர்நாடக முதல்வர் மாற்றம்? டெல்லியில் காங்கிரஸ் முக்கிய ஆலோசனை

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பதவி மாற்றம் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் தற்போது சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்க கட்சித் தலைமை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சித்தராமையாவின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகும் அவர் தொடர்ந்து முதல்வராக நீடித்து வருவதால், டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மூத்த தலைவர் சச்சின் பைலட் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு வருவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, 'கட்சி மேலிட அழைப்பின் பேரில் டெல்லி வந்துள்ளேன். கூட்டத்தின் நோக்கம் குறித்து எனக்குத் தெரியாது' என்று தெரிவித்தார். டி.கே. சிவகுமார், 'ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்கிறேன், செய்தியாளர்களைப் பிறகு சந்திக்கிறேன்' என்றும், அடுத்த முதல்வர் நீங்கள் தானா என்ற கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்துச் சென்றார்.

கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறுகையில், 'கூட்டத்திற்கான காரணம் யாருக்கும் தெரியாது. மாநிலங்களவைத் தேர்தல், எம்எல்சி தேர்தல் அல்லது அமைச்சரவை மாற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ராகுல் காந்திக்கு மட்டுமே இது தெரியும். முதல்வரும் துணை முதல்வரும் அவரை சந்தித்த பிறகு தகவல் தெரியும்' என்றார். இருப்பினும், முதல்வர் பதவி மாற்றம் குறித்த ஆலோசனைகளே நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version