சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை அமைப்பது தொடர்பாக எழுந்த விவாதங்களுக்கு, திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விரிவான விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் அருண் ராஜ், 'அரசு கஜானாவில் பணம் இல்லை என எம்.எல்.ஏ-க்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், கடந்த ஆட்சியில் கலைஞருக்காக கடலில் பேனா சிலை வைக்க வேண்டும் என்று சொன்னபோது மட்டும் நிதி இருந்ததா?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எ.வ.வேலு, 'முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நினைவாக பேனா சிலை அமைக்க வேண்டும் என இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், கடலில் பேனா சிலை அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஒன்றிய அரசும், கலைஞரின் பேனா சிலையை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இருப்பினும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்த சூழலில் பேனா சிலை அமைப்பது அவசியமா?' என்று கேள்வி எழுப்பியதோடு, 'தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீரடைந்த பிறகு அமைத்துக் கொள்ளலாம், தற்போது வேண்டாம்' என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த விஷயம் அனைவரும் அறிந்ததே' எனத் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள் அதிகம் நடந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று பேசியது முற்றிலும் தவறானது என்றும் எ.வ.வேலு குறிப்பிட்டார். தலித்துகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் உத்தர பிரதேசம் 71,000 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாடு 8,110 வழக்குகளுடன் 10வது இடத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததற்கான சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

