2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் மினி ஏலம், டிசம்பர் 2026-ல் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது. இந்த மினி ஏலம், 2025-27 காலகட்டத்திற்கான கடைசி மினி ஏலமாகும். ஐபிஎல் தனது 20 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அடுத்த சீசனை மிகவும் பிரமாண்டமாக கொண்டாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் கூறுகையில், 2027 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலத்தை இந்தியாவில் நடத்தவே பிசிசிஐ விரும்புவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக துபாய், ஜித்தாஹ், அபுதாபி போன்ற வெளிநாடுகளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவர ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முயற்சித்தாலும், திருமண சீசன் காரணமாக தகுந்த இடங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த முறை இது ஒரு மினி ஏலம் என்பதால், கண்டிப்பாக இந்தியாவிலேயே நடத்த விரும்புவதாகவும், அதற்கேற்ப தகுந்த இடம் கிடைக்கும் என நம்புவதாகவும் அருண் சிங் துமால் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ-யின் விருப்பமான இடங்கள் கிடைப்பதைப் பொறுத்து, ஏலம் நடைபெறும் நகரம் இறுதி செய்யப்படும். இதற்கிடையில், 2027 ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடர் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறவுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 28 அன்று கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறும். இதில் பங்கேற்கும் ஐந்து அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 28-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய சீசனை நோக்கிய முதல் முக்கிய நடவடிக்கையாக, செப்டம்பர் 28, 2026 அன்று வீரர்களைத் தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிவடைகிறது. ஐந்து அணிகளும் தங்களின் தற்போதைய அணியில் இருந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் புதிய சீசனுக்கான அணிக் கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கலாம் என WPL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் ஏலம் அக்டோபர் 28, 2026 அன்று கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடைபெறும். அங்கு ஐந்து அணிகளும் தங்களது அணியை வலுப்படுத்த தேவையான வீரர்களைத் தேர்வு செய்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

