ஐபிஎல் 2026: ஆர்சிபி நிர்வாகம் பொய் சொன்னதா? யாஷ் தயாள் விளக்கம்

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வீரர் யாஷ் தயாள் விளையாடாதது குறித்து, அணி நிர்வாகம் தெரிவித்த காரணத்தை அவர் மறுத்துள்ளார். இது அணி நிர்வாகத்திற்கும் வீரருக்கும் இடையே முரண்பாடு நிலவுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதில் 28 வயதான யாஷ் தயாள் முக்கியப் பங்காற்றினார். இந்த ஆண்டு அவர் விளையாடாதது குறித்து ஆர்சிபி அணியின் கிரிக்கெட் இயக்குனர் மொ போபட், 'யாஷ் தயாள் தனது தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை, அவருக்கு அணி நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கிறது' என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், ஒரு நேர்காணலில் பேசிய யாஷ் தயாள், 'நான் தொடரில் இருந்து விலகியது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல. மேலிடத்து அதிகாரிகளே அந்த முடிவை எடுத்தனர். இதற்கான காரணம் எனக்குத் தெரியாது. டிவியில் போட்டிகளைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது' என்று கூறியுள்ளார். இது அணி நிர்வாகம் தெரிவித்த தகவலுக்கு முற்றிலும் மாறாக உள்ளது.

யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூர் மற்றும் காசியாபாத்தில் பாலியல் புகார்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த சட்டச் சிக்கல்களே அவர் இந்த சீசனில் விளையாடாததற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், அணி நிர்வாகத்துடனும், பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்குடனும் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், தங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும் யாஷ் தயாள் தெளிவுபடுத்தியுள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் தான் ஆடவில்லை என்றாலும் பெங்களூரு அணி அவரை விடுவிக்காமல் தக்கவைத்துள்ளது தனக்கு நம்பிக்கையை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version