2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி குறித்த போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அதன் இணை உரிமையாளரான நடிகை பிரீத்தி ஜிந்தா கடும் கோபமடைந்துள்ளார். அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்படும் இந்த பொய்ச் செய்திகளுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகமும், பிரீத்தி ஜிந்தாவும் விடுத்துள்ள எச்சரிக்கை, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, முதல் 7 போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. இதனால், அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அணியின் உள்விவகாரங்கள் மற்றும் வீரர்களுக்கு இடையேயான பிரச்சனைகளே காரணம் என சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் 'எக்ஸ்' தளத்தில் ஒரு கடுமையான பதிவை வெளியிட்டது. விளையாட்டில் விமர்சனங்கள் சகஜம் என்றாலும், மலிவான விளம்பரத்திற்காக போலியான செய்திகளை உருவாக்குவதை ஏற்க முடியாது என்றும், பத்திரிகையாளர்கள் உண்மையைச் சரிபார்த்து செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தது. பின்னர், அந்தப் பதிவை நீக்கிவிட்டு, அனைவரையும் எச்சரிக்கும் வகையில் திருத்தப்பட்ட பதிவை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தாவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சாதாரண விமர்சனத்திற்கும், திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ச் செய்திகளுக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அணியின் பிராண்ட் மதிப்பிற்கும், தனிப்பட்ட வீரர்களுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் செய்தியைப் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, வரும் வியாழக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

