ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் 9 சரக்கு கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்களில் 198 இந்திய மாலுமிகள் சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அப்பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி.யுடன் இந்தியாவை நோக்கி புறப்பட்ட இந்த ஒன்பது கப்பல்களும், ஹார்முஸ் ஜலசந்தி அருகே காத்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பல்களிலும், மாலுமிகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்திய அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'சர்வதேச கடல் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சமீபத்திய தாக்குதல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, பதற்றத்தை தணிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், 'பொதுமக்களின் பாதுகாப்பு, சர்வதேச கடல் போக்குவரத்து, எரிபொருள் வினியோகம் மற்றும் உலக வர்த்தக ஓட்டம் தடையின்றி தொடர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மோதலுக்கு அமைதியான மற்றும் நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு திரும்ப வேண்டும்' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீதமும், எல்.என்.ஜி. எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் 60 சதவீதமும், எல்.பி.ஜி. எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு இறக்குமதியில் 90 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்காசிய பகுதியில் பதற்றம் நீடித்த போதிலும், இதுவரை சுமார் 50 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து இந்தியாவை வந்தடைந்துள்ளன. இருப்பினும், பாதுகாப்பு அச்சம் காரணமாக மேற்காசிய நாடுகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இதன் காரணமாக, வழக்கத்தை விட எரிபொருள் இறக்குமதி அளவு குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தடையில்லா வர்த்தகத்தை தொடரவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், 198 இந்திய மாலுமிகள் தங்கள் கப்பல்களில் பாதுகாப்பாக உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் நலன் கருதி, இந்திய அரசு சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. விரைவில் கப்பல்கள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

