வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மூலம் கடன் பெற்று, வீடு கட்ட, வாங்க அல்லது பழுதுபார்க்க விண்ணப்பித்தவர்களுக்கு அபராத வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தின் கீழ், தவணை தவறிய கடன்களுக்கு விதிக்கப்பட்ட அபராத வட்டி, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு விதிக்கப்படும் டிகிரி வட்டி, மற்றும் தவணை தவறிய கடன்களுக்கான EMI வட்டி என அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
குறிப்பாக, 31.03.2026-க்கு முன்னர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவடைந்து, அரசாணை வெளியிடப்படும் நாளில் நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். 31.03.2026-க்குப் பிறகு தவணை தவறிய கடன்களோ அல்லது காலக்கெடு உள்ள கடன்களோ இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படாது என அரசாணை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குறைந்த வருவாய் பிரிவினர் (LIG) மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு (MIG) மேலும் ஒரு சிறப்புச் சலுகையாக, 1 விழுக்காடு வட்டித் தொகை கூடுதலாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடன் வாங்கியவர்களின் வட்டிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி) அறிக்கையின்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 24,301 உறுப்பினர்கள் தவணை தவறிய கடன் பட்டியலில் உள்ளனர். இவர்களது மொத்தக் கடன் மற்றும் வட்டி நிலுவையில் சுமார் ரூ.2,430.28 கோடி அளவிற்குத் தள்ளுபடி சலுகை பெற வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நீண்ட காலமாக வசூலாகாமல் இருந்த சுமார் ரூ.776.42 கோடி நிலுவைத் தொகை வசூலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தள்ளுபடித் திட்டத்தினால் ஏற்படும் நிதியிழப்பைத் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதால், அரசுக்கு எந்தவிதமான நிதியிழப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.
இந்த ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் உறுப்பினர்கள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நிலுவைத் தொகையை பகுதி பகுதியாகவோ அல்லது தவணை முறையிலோ செலுத்த முடியாது; அரசாணை விதிகளின்படி உரிய தொகையை முழுவதுமாக ஒரே தவணையில் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வட்டித் தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
முறையற்று வழங்கப்பட்ட கடன்கள், பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட கடன்கள், மற்றும் சங்கங்கள் தமது சொந்த நிதியிலிருந்து வழங்கிய கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும், ஒருவர் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும். ஏற்கனவே முந்தைய கடன் தீர்வுத் திட்டங்களில் சலுகை பெற்றவர்கள் இதில் இணைய முடியாது.
கடன் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், அதனைத் திரும்பப் பெற்றால் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும். கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை சம்பந்தப்பட்ட வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், கடன்தாரர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு என முத்தரப்பினருக்கும் பெரும் நன்மைகள் ஏற்பட்டுள்ளன. கடன் வாங்கிய சாமானிய மக்கள் தங்களது வீட்டை ஜப்தி செய்து விடுவார்களோ அல்லது நீதிமன்றத்திற்கு இழுத்து விடுவார்களோ என்ற அச்சமின்றி, அபராத வட்டியின்றி குறைந்த தொகையைச் செலுத்தி கடனிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம். இதன் மூலம் அவர்களது சொந்த வீடு அவர்களுக்கே நிரந்தரமாகச் சொந்தமாகும்.
மறுபுறம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்குப் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த ரூ.776.42 கோடி நிதி மீண்டும் கிடைப்பதால், புதிய உறுப்பினர்களுக்கு வீட்டுக் கடன்களை வழங்குவதற்கான நிதி ஆதாரம் வலுப்பெறும். அரசுக்கும் நீதிமன்ற வழக்குகளின் சுமை குறைந்து கடன் வசூல் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

