2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகவுள்ள ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, ரூ.10 கோடி ரொக்கப் பணத்துடன் இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களையும் தர சிஎஸ்கே அணி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை, வர்த்தக அடிப்படையில் வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக்கிற்குப் பதிலாக இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே, சிவம் துபே ஆகியோருடன் பணத்தையும் கேட்டிருந்தது.
கடந்த 2026 ஐபிஎல் தொடரில் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடிய 19 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, சிஎஸ்கே அணியின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், அவரை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு மாற்று யோசனையை மும்பை அணிக்கு வழங்கியுள்ளது. அதன்படி, அதிரடி ஆல்-ரவுண்டர் சிவம் துபே, தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ரூ.10 கோடி ரொக்கம் ஆகியவற்றை ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாகத் தர சிஎஸ்கே அணி ஆஃபர் கொடுத்துள்ளது. இந்த ஒட்டுமொத்த வர்த்தகத்தின் சந்தை மதிப்பு ரூ.20 கோடியைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்பதோடு, இந்திய வீரராகவும் இருப்பதால், வெளிநாட்டு வீரர்களுக்கான நான்கு இடங்கள் சிஎஸ்கே அணிக்கு முழுமையாகக் கிடைக்கும். தற்போதைய நிலையில், இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தேவையாக உள்ளது.
இருப்பினும், கடந்த 2026 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா 206 ரன்களும், 4 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒருவேளை தோல்வியில் முடிந்தால், ஹர்திக் பாண்டியாவை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காத்திருப்பதாகவும், அங்கு அவருக்கு கேப்டன் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

