இந்தியாவின் தேசியக் கொடி, நம் நாட்டின் பெருமை என்றும், தேசத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்க தொடர்ச்சியான உத்வேகம் அளிக்கும் ஆதாரம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 'ஹர் கர் திரங்கா' (வீடுதோறும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை புதுப்பிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா திட்டத்தின் ஒரு பகுதியாக வீடுதோறும் மூவர்ணக் கொடியேற்றும் இயக்கம் தொடங்கப்பட்டது. இது ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடும் ஒரு வருடாந்திர மரபாக மாறியுள்ளது. இந்த ஆண்டுக்கான 'ஹர் கர் திரங்கா' இயக்கம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நமது மூவர்ணக் கொடி, நமது பெருமை. நாட்டிற்காக நமது சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. நாம் அனைவரும் #HarGharTiranga இயக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்போம். மேலும், வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கு பங்காற்றுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை மீண்டும் புதுப்பிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் தனது 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், இந்த ஆண்டின் முயற்சிகளை வந்தே மாதரம் பாடலுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
'ஹர் கர் திரங்கா' பிரச்சாரம், இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் பங்களிப்பு இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்ற வேண்டும் என்றும், தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடும் வகையிலான பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம், இந்தியர்களின் மனதில் தேசபக்தி உணர்வை வலுப்படுத்துவதோடு, தேசிய ஒற்றுமையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர இந்த வாய்ப்பு அமைகிறது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இயக்கத்தில், பொதுமக்கள் அனைவரும் தாராளமாகப் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபர் முயற்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பெருமையையும், ஒற்றுமையையும் பறைசாற்றும் ஒரு மகத்தான நிகழ்வாகும்.

