நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆபரண தங்கத்தின் விலை இன்று இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை படிப்படியாக குறைந்து, நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. ஒரு மாத காலத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை சுமார் ரூ.8,360 வரை குறைந்தது.
தங்கம் விலை எதிர்காலத்திலும் குறைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75,000 வரை குறையக்கூடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதில் இருந்து தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், அது தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள் உயரும்போது, டாலரில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தை விற்றுவிட்டு, டாலர் வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும். ஆனால், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் கெவின் வாஷ் தலைமையில் நடைபெற்ற வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில், 12 பேர் கொண்ட நிபுணர் குழு பங்கேற்றது.
இந்தக் கூட்டத்தில், 10 உறுப்பினர்கள் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்றும், தற்போதைய 3.75% முதல் 4% வரம்பிலேயே தொடரலாம் என்றும் வாக்களித்தனர். இருப்பினும், மூத்த உறுப்பினர்கள் இருவர் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வட்டி விகிதம் உயர்த்தப்படாததால், இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மட்டுமே தங்கம் விலை குறையக்கூடும் என்றும் மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
கடந்த வாரம் தங்கம் விலை சரிவை சந்தித்த நிலையில், இந்த வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 3) சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.12,775 ஆகவும், ஒரு சவரன் ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200 ஆகவும் விற்பனையானது.
இன்று, ஒரு கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ.12,800 ஆகவும், ஒரு சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.1,02,400 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சமாகவும் தொடர்ந்து விற்பனையாகிறது.

