ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவரது மனைவி வினி ராமன் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தங்களுக்கு மாயா மேக்ஸ்வெல் என்ற செல்ல மகள் பிறந்திருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என்ற மகனும் உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதால் மேக்ஸ்வெல் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேக்ஸ்வெல் மற்றும் வினி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான செய்தியுடன், தங்களது மகளின் அழகிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். 'எங்கள் கனவு தேவதை வந்துவிட்டாள், மாயா மேக்ஸ்வெல்' என்று அவர்கள் தங்கள் பதிவிற்கு தலைப்பிட்டுள்ளனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு கிரிக்கெட் நிறுவனங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் ஆகியோரின் காதல் கதை சுவாரஸ்யமானது. இவர்கள் முதன்முதலில் டிசம்பர் 2013-இல் சந்தித்தனர். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இவர்கள், பின்னர் காதலிக்கத் தொடங்கினர். 2017-இல் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 2020 பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர், மார்ச் 27, 2022 அன்று மெல்போர்னில் இருவீட்டார் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பாரம்பரிய கிறிஸ்தவ முறைப்படியும், தமிழ் பிராமண முறைப்படியும் என இரண்டு விதமான சடங்குகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக, தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் மேக்ஸ்வெல் பாரம்பரிய தங்க நிற ஷெர்வானி ஆடை அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.
மேக்ஸ்வெல், கடந்த ஜூன் 2025-இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி 3990 ரன்களையும், 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
குறிப்பாக, 2023 உலகக் கோப்பையில் மும்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியபோது, அவர் விளாசிய ஆட்டமிழக்காத 201 ரன்கள், உலகக் கோப்பை வரலாற்றிலேயே மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தற்போது, மேக்ஸ்வெல் புதிதாகத் தொடங்கப்படவுள்ள ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடருக்காகத் தயாராகி வருகிறார். இத்தொடரில் அவர் பெல்ஃபாஸ்ட் வுல்வ்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் மற்றும் கேப்டனாகவும் செயல்பட உள்ளார்.

