தூத்துக்குடியில் திமுகவினர் தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் வசூல் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் பேசிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வசூல் செய்ததாக கூறும் நிர்மல்குமார் அதை நிரூபிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கீதா ஜீவன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார், அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தனது தந்தை பெரியசாமி, தன்னைப்பற்றியும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றியும் அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மழை வெள்ள காலங்களில் தூத்துக்குடியில் யாரும் களமிறங்கவில்லை என நிர்மல்குமார் கூறியது முற்றிலும் பொய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்எல்ஏ மற்றும் அமைச்சர் என்ற முறையில் தூத்துக்குடியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், அன்றைய துணை முதல்வர் மற்றும் தொகுதியின் எம்பி ஆகியோரும் ஆய்வு செய்து தீர்வுகளை ஏற்படுத்தியதாகவும் கீதா ஜீவன் விளக்கினார். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பிப் பார்க்காமல் ஓடிய நிர்மல்குமார், தூத்துக்குடி குறித்து பேசலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் திமுகவினர் வசூல் செய்வதாக நிர்மல்குமார் பொய்யாக பேசியுள்ளதாகவும், அப்படி எந்த வசூலும் நடைபெறவில்லை என்றும் கீதா ஜீவன் திட்டவட்டமாக தெரிவித்தார். வசூல் செய்ததை நிரூபிக்க முடியாவிட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் சவால் விடுத்தார்.
'வாய் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாம்' என்ற அகம்பாவத்தை நிர்மல்குமார் கைவிட வேண்டும் என்றும், பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என்றும் கீதா ஜீவன் கேட்டுக்கொண்டார்.

