எரிபொருள் விலை உயர்வு: கடின காலத்துக்கு தயாராகுதல்! – என்ன நடக்கிறது?

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 'அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எனவே, மக்கள் கடினமான காலத்திற்கு தயாராக வேண்டும். சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். உலக நாடுகள் எதுவும் சர்வதேச பொருளாதார கொந்தளிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், இந்தக் கடின காலத்தை கடந்து செல்லக்கூடிய திட்டங்களும், திறனும் அரசிடம் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக மீண்டு எழுவோம்' என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நிலைமையை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளார். "பெட்ரோல், டீசல் விலை உலகளவில் உயர்ந்துள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவது நமது பொறுப்பு. சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தேசபக்திக்கு சிறந்த பங்களிப்பாகும். இது குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர் போன்ற ஆசியப் பொருளாதாரத்தின் முக்கிய நாடுகளின் தலைவர்களின் எச்சரிக்கைகள், நாம் அனைவரும் கடினமான காலத்துக்குத் தயாராக வேண்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மே 15, 2026 நிலவரப்படி, சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 106 முதல் 109 டாலர் வரை வர்த்தகமாகிறது. இந்திய ரூபாயில் இது ரூ.8,300-ஐ கடந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் ஏப்ரல் 2026-ல் 8.3% ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த நிலையில், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம், நாட்டின் பணவீக்கத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது FMCG பொருட்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்துச் செலவுகள் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்கள், கார்கள் பயன்படுத்துவோரின் எரிபொருள் செலவு அதிகரிக்கும். டீசல் விலை உயர்வால் பேருந்து, ஆட்டோ, வாடகை டாக்சிகள், சரக்கு வாகன சேவைகளின் கட்டணங்கள் உயரும். இதனால், பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் விலையும் உயரும். ஏற்கனவே, அமுல், மதர் டெய்ரி போன்ற பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 வரை பால் விலையை உயர்த்தியுள்ளன. கிராமப்புறங்களில், டீசல் டிராக்டர்கள், நீரேற்று இயந்திரங்கள், வேளாண் சரக்கு வாகனங்கள் அதிகம் சார்ந்திருப்பதால், விவசாய உற்பத்திச் செலவும் அதிகரித்து, உணவுப் பொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, பெட்ரோல், டீசல் நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) 5% பங்களிக்கிறது. இவற்றின் விலை 3% உயர்ந்தால், CPI-ல் 0.15% தாக்கம் இருக்கும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட LPG, CNG விலையையும் சேர்த்தால், பணவீக்கத்தில் மேலும் அழுத்தம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின்போது, பெட்ரோலிய இருப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எல்பிஜி விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

நுகர்வோரின் கருத்துக்களும் இந்த விலை உயர்வால் தங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கின்றன. சிலர், 'இந்த விலையேற்றம் இத்துடன் நிற்குமா அல்லது தொடருமா' என கவலை தெரிவித்துள்ளனர். வேறு சிலர், 'போர் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளின் ஆணிவேரை உணர்ந்து, அரசு தீவிர பரிசீலனைக்குப் பின்னரே இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்' என்று அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். இத்தகைய சூழலில், சிக்கன நடவடிக்கையாக பிரதமர், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். டெல்லி முதல்வர் அரசு ஊழியர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாள் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' அறிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version