கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.350லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஸ்ரீநாத் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இது மீனவ சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், கடல் மீன் வளத்தை பெருக்கும் நோக்கில், கடலோர மாவட்டங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைத்தல் மற்றும் மீன் குஞ்சுகள் இருப்பு திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் புதிய மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு தொடங்கப்படும் என்றும், நன்னீர் இரால் வளர்ப்பை ஊக்குவிக்க சிறப்பு இறால் இனப்பெருக்க மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடற்பாசி மற்றும் கடல் கூண்டு மீன் வளர்ப்புக்கு மானிய உதவி வழங்கப்படும் என்றும், Aqua Zones மற்றும் நீர்வாழ் மண்டலங்களின் அறிவியல் பூர்வமான வரைபடம் தயாரிக்கப்படும் என்றும், கடலோர வளங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் விளக்கினார். திருவொற்றியூர், சின்னமுட்டம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில் நவீன வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், டிஜிட்டல் மீன் ஏலக்கூடங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும். மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னையில் சர்வதேச கடல் உணவு கண்காட்சி மற்றும் சமையல் திருவிழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் கடல் உணவுகளை உலகிற்கு அறிமுகப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
மீன்வளப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச ஆராய்ச்சி பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படும். ஆய்வகங்கள் NABL அங்கீகாரத்துடன் வலுப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை போன்ற அண்டை நாடுகளால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.500லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும் என்றும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

