தமிழக சட்டப் பேரவையில் இன்று (ஆக.17) விதி எண் 110ன் கீழ் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கருதி, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
'தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர் நாடி. உலகில் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால் அது விவசாய தொழில் மட்டுமே. உலகின் ஒரு மூலையில் உற்பத்திச் செய்யப்படும் விவசாய பொருட்கள், உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்கிறது. எந்த நாடு உழவுத்தொழிலை மதித்து விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்குகிறதோ அந்த நாட்டில் தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்' என முதலமைச்சர் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழக அரசு, பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்தது. கடந்த மே 25- ஆம் தேதி, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூபாய் 50,000 வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன. நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூபாய் 50,000 வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி, ரூபாய் 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையையும், ரூபாய் 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 35,000 தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 19- ஆம் தேதி ஆணையிடப்பட்டது.
இதில் ஜூலை 31- ஆம் தேதி வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள், பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
இதனையடுத்து, ஆகஸ்ட் 7 ஆம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள், துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ரூபாய் 75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும், ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 75,000 வரையும், ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்டுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம், ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூபாய் 75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால் ஏற்கனவே பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக ரூபாய் 40,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

