போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

சமூக வலைதளங்களில் தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பாக, பாஜக வழக்கறிஞர்கள் இன்று (மே 16) சென்னை வேப்பேரியில் உள்ள இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரில் ஒரு போலி கடிதம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

அந்தப் போலி கடிதத்தில், 'சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவின் வாக்கு வங்கி 12 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைந்துள்ளதற்கு நாங்கள் தான் காரணம். மேலும், இங்கு இருந்து மானம் கெட்டுத் தொடர்வதை விட, கட்சியின் நலனுக்காக அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறோம். இது எங்கள் தனிப்பட்ட முடிவு அல்ல, கட்சியின் எதிர்கால நலனுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அவதூறான மற்றும் போலி கடிதத்தைப் பரப்பிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் குமரகுரு, தமிழக அரசின் இணையக் குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆதரவாகவும், இது குறித்து மேலும் விளக்கமளிப்பதற்காகவும், தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று இணைய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version