தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் உச்ச வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் கடன் வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு கல்விக்கடன் சரியான முறையில் கிடைக்கிறதா, பெற்றோர்கள் வங்கிகளில் அலைக்கழிக்கப்படுகிறார்களா, வங்கி ஊழியர்கள் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குகிறார்களா போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் விவாதிக்கப்பட்டன.
முன்னதாக, 4 லட்சம் ரூபாய் வரை தகுதி உள்ள மாணவர்களுக்கு, பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்டவர்களின் உத்தரவாத கையெழுத்துடன் கல்விக் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த கடன் உச்ச வரம்பை 7.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கான கல்விக் கடன் உச்ச வரம்பு உயர்த்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 1,02,000 மாணவர்களுக்கு சுமார் 863 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நடப்பாண்டில், 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்விக் கடன் தொகை 3000 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நோடல் வங்கிகள் மட்டுமின்றி, ஒரு பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்து, கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க உதவுவார்கள். இதன் மூலம், எந்த மாணவனும் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாது என அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு உரிய மரியாதையும், பெற்றோர்களுக்கு வங்கி ஊழியர்கள் மூலம் மதிப்பும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

