காரைக்குடியில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்லூரியில், மாணவர்களின் சர்வதேச வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்காக ஜப்பான் மொழிப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இந்த முன்னணி வடிவமைப்பு நிறுவனம், ஜிங் லாங்குவேஜஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய பாடத்திட்டத்தை ஆகஸ்ட் 21, 2026 அன்று தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம், டாட் கல்லூரியின் குளோபல் டிசைன் ப்ரோக்ராம் படிக்கும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெறவும் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு உலகளாவிய தொழில் நோக்கம் மற்றும் சர்வதேச கல்விப் பயணத்தை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.
சென்னை, அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் வளாகத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், மியான்மர் ஒன்றியக் குடியரசின் கௌரவத் தூதர் பேராசிரியர் ரங்கநாதன் மற்றும் இரயில்வே அமைச்சகத்தின் முதன்மை நிதி அலுவலர் திரு. பி. இளங்கோவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் ஏஆர். ஆர். ராம்நாத் அவர்கள் உரையாற்றுகையில், 'நாளைய வடிவமைப்பாளர்கள் உலகளவில் வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வடிவமைப்புத் திறன்கள் பொதுவானதாகிவிட்ட நிலையில், ஒருவர் பணிபுரியும் சந்தையின் மொழியில் தொடர்பு கொள்ளும் திறன் ஒரு முக்கிய வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜப்பானிய மொழி என்பது சென்னை நகரைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களை ஜப்பான் மற்றும் பிற உலகச் சந்தைகளில் தொழில்முறை வாய்ப்புகளை ஆராயத் தயார்படுத்தும் எங்கள் முதல் படியாகும்' என்று தெரிவித்தார்.
ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அவர், 'ஜப்பான் ஒரு சர்வதேச வாய்ப்புப் பாதையை வழங்குகிறது. எங்கள் மாணவர்களின் வலுவான வடிவமைப்புத் திறன்கள், தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் நிபுணத்துவம், மேலும் ஜப்பானிய மொழித் திறன் ஆகியவற்றின் இணைப்பு உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்கான புதிய பாதைகளைத் திறக்க முடியும். 70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட ஜாப்பனீஸ் இண்டஸ்ட்ரியல் டிசைன் அசோசியேசன் (JIDA) உடனான எங்கள் கூட்டாண்மை, ஜப்பானிய மொழியில் திறம்பட தொடர்பு கொள்ளக்கூடிய சாத்தியத்தை மேலும் வலுப்படுத்துகிறது' என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த முயற்சி, திறன் மற்றும் மனிதவளப் பரிமாற்றம் குறித்த இந்தியா-ஜப்பான் கவனம் அதிகரித்து வருவதுடன், 2025 இந்தியா – ஜப்பான் ஆக்ஷன் பிளான் உடனும் ஒத்துப்போகிறது. இது இந்தியாவில் ஜப்பானிய மொழிக் கல்வியை ஊக்குவிப்பதோடு, இரு நாடுகளுக்கிடையே திறமையான பணியாளர்களின் பரிமாற்றத்தை விரிவுபடுத்தவும், இந்திய மாணவர்களுக்கும் ஜப்பானிய நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது.
ஜிங் லாங்குவேஜஸ் மூலம், டாட் மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஜே.எல்.பி.டி. (JLPT) என் 5 (N5) மற்றும் என் 4 (N4) நிலைகளில் ஜப்பான் மொழி கற்பிக்கப்படும். ஜப்பானில் தொழில்முறை வாய்ப்புகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு பின்னர் என் 3 (N3), என் 2 (N2) மற்றும் என் 1 (N1) நிலைகளுக்கு முன்னேறும் வாய்ப்பு வழங்கப்படும். ஜிங் லாங்குவேஜஸ் நிறுவனம் ஆசிரியர்கள், கட்டமைக்கப்பட்ட பயிற்சி, நடைமுறைத் தொடர்பாடல் மற்றும் நேரடி மொழிப் பயிற்சி ஆகியவற்றை வழங்கி, மாணவர்கள் ஜப்பானிய மொழியில் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும்.
2020-இல் நிறுவப்பட்ட டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன், அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு பல்துறை வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகும். இது டிசைன் துறையில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது. தொடர்ந்து வளர்ந்து வரும், தொழில்துறை சார்ந்த பாடத்திட்டம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன், மாணவர்களுக்கு பல்துறைத் திறன்கள், சர்வதேச அனுபவம் மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கி, போட்டித்திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை வளர்ப்பதில் உறுதியாக செயல்படுகிறது.

