முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையில் முதலமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய வசந்தம் கார்த்திகேயன், 'முதலமைச்சரிடம் கேள்வி கேட்டால், அவருக்கு அருகில் இருக்கும் மூன்று அல்லக்கைகள்தான் பதில் சொல்கிறார்கள். அவர்களும் சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்வார்கள். உதாரணமாக, 'நீங்கள் இப்போது சேலத்திற்குப் போகிறீர்களா?' என்று கேட்டால், 'இல்லை, நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்' என்று சொல்வார்கள்' என்று கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது கள்ளக்குறிச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி, முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, எம்.பி. ஆ.ராசா மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரின் மீதும் சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

