முதல்வர் விஜய்யின் அடியாளால் பெண்கள் பாதிப்பு – திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற புத்தெழுச்சி நாள் விழாவில், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள், புத்தாடைகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், திருநங்கைகளுக்கு நல உதவிகள், ரத்ததானம் அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பேசிய திருச்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் சாதனைகளை மறைக்க சமூக வலைத்தளங்களில் ஒரு மாஃபியா குழு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன் திமுகவுக்கு எதிராக பரப்புரை செய்தாலும், தற்போது திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாகவும், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து பேசிய முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து 6 மாதங்கள் பேசாமல் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

திமுக அரசின் சாதனைகளை தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகவும், தவெகவை சார்ந்தவர்கள் பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இனி சத்தமாக பேசப்போவதாகவும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்ததாகவும், திமுகவின் மிகப்பெரிய சக்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அடியாள் இருப்பதாகவும், அவர் சமூக வலைத்தளங்களில் மாஃபியாக்களை உருவாக்கி பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும் திவ்யா சத்யராஜ் குற்றம் சாட்டினார். சினிமா கனவுகளோடு வரும் பெண்களை பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை அந்த அடியாள் கெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த அடியாளின் பெயரை 'மிஸ்டர் ஜெ.' என்று குறிப்பிட்ட அவர், ஒரு மாஃபியா நிறுவனத்தை நடத்தி வரும் அவர், கிராமங்களில் இருந்து வரும் பெண்களிடம் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது பேஷண்ட் என்றும், பட்டியல் சமூகத்தை சேர்ந்த அந்த பெண், முதல்வரின் அடியாள் செய்த துன்புறுத்தலால் சொந்த ஊருக்கே சென்றுவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version