தண்ணீர், மின்சாரம் இல்லை: டெல்டா விவசாயிகளின் நிலை என்ன? – இபிஎஸ் கேள்வி

மேட்டூர் அணையின் பாசன நீரை மட்டுமே நம்பி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. தற்போது அணையில் 90 அடிக்குக் குறைவாக, வெறும் 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கான தினசரி நீர்வரத்து வெறும் 424 கன அடியாகக் குறைந்துள்ளது. இதனால், இந்த ஆண்டுக்கான நீர் திறப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிப் பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி தவறாமல் திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு திறக்கப்படாதது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் பெரும் அதிர்ச்சியிலும், மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். டெல்டா பகுதியின் குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரை மட்டுமே நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு விவசாயிகளுக்கு வாழ்வா சாவா பிரச்சினையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன் என்ற பெயரில் நிலுவையில் உள்ள ரூ.10,000 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாகக் கூறி விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளைப் போராட்டக் களத்திற்குத் தள்ளிவிட்டுள்ள அரசு, அணையையும் திறக்காமல், அதற்கு மாற்றாக ரூ.134 கோடிக்குக் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் மற்றொரு கண்துடைப்பு அறிவிப்பை வெளியிட்டு மக்களை திசைதிருப்பப் பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததை நினைவு கூர்ந்த எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு அதை 18 மணி நேரமாகக் குறைத்தது விவசாயிகளுக்குச் செய்த துரோகம் என்று கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் தங்களது சொந்தப் பம்பு செட்டுகளைக் கூட இயக்க முடியாத அவல நிலை நிலவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, விவசாயிகள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தின் தீவிரத்தை அரசு உடனடியாக உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து எப்படியாவது தண்ணீரைத் திறந்து அது டெல்டாவின் கடைமடைப் பகுதி வரை தடையின்றிச் சென்றடைவதற்கான அனைத்துப் போர்க்கால நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version