தமிழகத்தில் தொழிற்சாலைகள் வராததற்கு அரசியலே முக்கிய காரணம் என அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அரசியல் செய்வதால், தமிழகத்திற்கு 1 டிரில்லியன் அல்லது 1.5 டிரில்லியன் முதலீடுகள் வராது என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என திமுக போராட்டம் நடத்தியதை சி.வி.சண்முகம் சுட்டிக்காட்டினார். ஆனால், அதே விவசாயிகளின் நலனைப் பற்றி கவலைப்படாமல், திமுக அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளும்கட்சியாக இருக்கும்போது வேறு நிலைப்பாட்டையும் திமுக எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டதையும், அதேபோல் திமுக கொண்டுவந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதால், தமிழகத்திற்கு பெரும் முதலீடுகள் வராது என்றும், இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகவும் சி.வி.சண்முகம் கூறினார்.
தமிழகத்தில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டுமென்றால், சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். தற்போது தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் வரவில்லை என்றும், இதனால் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். அரசு வேலைவாய்ப்புகளும் இல்லை, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுவதில்லை என்றும், தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டால் மட்டுமே வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் சட்டப்பேரவையில் பேசினார்.

