தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் அருணாச்சலம், கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்' என்று அவர் மரண வாக்குமூலமாக அளித்த வீடியோ, இந்த கொடூர சம்பவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், "தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற வாலிபர், தென்பாகம் காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். அவர் மரண வாக்குமூலமாக, 'போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்' என்று கூறியுள்ள வீடியோ, இந்த கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாகர்கோவிலில் சிறை ஊழியர்களின் தாக்குதலால் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் உயிரிழந்த அதிர்ச்சி மறையும் முன்பே, தூத்துக்குடியில் மீண்டும் ஒரு காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் திரு. விஜய் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவரது ஆட்சியில் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்றும் தவெக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

